செய்திகள்

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தொற்றால் உயிரிழக்கவில்லை -எய்ம்ஸ் ஆய்வு தகவல்

புதுடெல்லி, ஜூன்.6-

தடுப்பூசி போட்டு கொண்டபின் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து முதல் முறையாக நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 63 பேரிடம், அவர்கள் தொற்றுக்கு ஆளான பின் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 36 பேர் இரு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள், 27 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் எடுத்தவர்கள். 10 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 53 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர். இதில் 41 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள். இதில் யாருக்கும் இணை நோய்கள் இல்லை.

டெல்லியில் பெரும்பாலும் உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617.2, பி.1.1.7 ஆகிய வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த இரு தடுப்பூசிகளும் இந்த வைரஸ்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், தீவிரமான அறிகுறிகளால் பாதிக்கப்படவில்லை. நோயின் தீவிரமும் அதிகமாகவில்லை, உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *