செய்திகள்

தடுப்பூசியை வீணாக்குவதில் ஜார்கண்ட் மாநிலம் முதலிடம்

புதுடெல்லி, ஜூன்.11-

தடுப்பூசியை வீணாக்குவதில் ஜார்கண்ட் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இது மத்திய அரசுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கும் மாநிலமாக ஜார்கண்ட் மாநிலம் அறியப்பட்டு உள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி அங்கு 33.95 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகி இருப்பதாக அரசு கூறியுள்ளது.

அதன்படி, 33.95 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகளை அதிகம் வீணடித்த மாநிலங்களில் ஜார்கண்ட் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக, சதீஸ்கர் 15.79 சதவீதமும், மத்தியப்பிரதேசம் 7.35 சதவீதமும் மருந்தை வீணடித் துள்ளன. பஞ்சாப் 7.8, டெல்லி 3.95 சதவீதமும் வீணடித்துள்ளது. இப்படி பல மாநிலங்கள் தடுப்பூசியை வீணாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்கள் ஒரு டோசையும் வீணாக்காமல், வீணாகும் டோஸ்களாக கணக்கிடப்படும் தடுப்பூசியை கூட போட்டு சாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில் கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்த மாநிலங்களில் வீணாகும் தடுப்பூசி விகிதம் முறையே -6.37 சதவீதம், -5.48 சதவீதம் என எதிர்மறை விகிதத்தில் உள்ளன.

மத்திய அரசு கடந்த மாதம் 7.91 கோடி தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருக்கிறது.

கடந்த 7-ந்தேதி வரை நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 38 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் திரிபுராவில் 92 சதவீதமும், ராஜஸ்தான், சத்தீஸ்காரில் தலா 65 சதவீதம், குஜராத்தில் 53 சதவீதம், கேரளாவில் 51 சதவீதம், டெல்லியில் 49 சதவீதம் போடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 19 சதவீதத்தினரே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதேநேரம் ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 24 சதவீதமும், பீகாரில் 25 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *