செய்திகள்

தஞ்சை பெரியகோவில் அடித்தளத்தை அசைப்பதாக அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, மே.3-

தஞ்சை பெரியகோவில் அடித்தளத்தை அசைப்பதாக அவதூறு வீடியோ பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் (தஞ்சை பெரியகோவில்) அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு வீடியோ காட்சி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கோவிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *