தஞ்சாவூர், டிச. 30–
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறையின் பூட்டு போலீஸ் பாதுகாப்புடன் உடைக்கப்பட்டு, புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தராக இருந்த க.சங்கர், பொறுப்பு பதிவாளராக இருந்த சி.தியாகராஜன் இருவரும் ஒருவர் ஒருவரை பதவியில் இருந்து விடுவிப்பதாக கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தனர். இந்த தகவல் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் கவனத்திற்கு சென்ற நிலையில், பல்கலைகழகத்தில், பழைய நிலையே தொடர வேண்டும், இரண்டு ஆணைகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை பதிவாளர் அறைக்கு நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டு போட்டுவிட்டார். பதிவாளர் அறையின் வெளிக் கதவை துணைவேந்தர் தரப்பு பூட்டிய நிலையில், உள் அறையை பதிவாளர் தியாகராஜன் பூட்டினார். பழைய பதிவாளர் தியாகராஜன் சாவி கொடுக்க மறுத்து வேறொரு அறையில் அமர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டது. இதையடுத்து, பரபரப்புக்கு மத்தியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவியேற்றுக் கொண்டார்.
துணைவேந்தர்- பதிவாளர் தரப்பு மோதலால் தஞ்சை பல்கலைக் கழகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பதிவாளர் நியமனம் தொடர்பான செயல்பாடுகளால் மிகவும் வேதனையடைகிறேன். தமிழ் வளர்ச்சித் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்த துணைவேந்தர் செயல்படுகிறார். தமிழ் விரோதிகளால் அவச்செயல் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.