செய்திகள்

தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை: வனத்துறையினர் தீவிர தேடுதல் பணி

மயிலாடுதுறை, ஏப். 9–

மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒரு வாரமாக பிடிபடாத நிலையில் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை நகரில் கடந்த 2-ம் தேதி சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து கடந்த 6 நாட்களாக மயிலாடுதுறை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் போல் உள்ள இடங்களில் சிறுத்தையை பிடிக்க 7 கூண்டுகள் வைத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குத்தாலத்தை அடுத்த காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்று கிடைத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் தானியங்கி காமிரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து, தீவிர தேடுதல் வேட்டையை அப்பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தையின் கால்தடம் உள்ளதாக வனத்துறையினர் கூறி ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை நகர்புற பகுதிகளில் வைக்கப்பட்ட மொத்த கூண்டுகளும் காஞ்சிவாய் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு 16 கூண்டுகள் நீர்வழிப்பாதைகளில் வைக்கப்பட்டுள்ளதாக, 15 குழுக்கள் அமைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் நாகை மாவட்ட வன பாதுகாவலர் அபிஷேக் தோமர் தெரித்தார்.

இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் எல்லை பகுதிகள் அமைந்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு 3 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா என்ற தகவல் பரவி வருவதால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *