செய்திகள்

தசம எண் அடிப்படையில் பிளஸ்–2 மதிப்பெண்கள்: நாளை வெளியீடு

சென்னை, ஜூலை.18-

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடுவதில் புதிய நடைமுறையை அரசு தேர்வுத்துறை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்–2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்–1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்–2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் தேர்வுத் துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டன.

மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட இருப்பதாக நேற்று முன்தினம் அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதற்கான இணையதள முகவரிகளையும் நேற்று வெளியிட்டது.

வழக்கமாக ஒவ்வொரு தேர்வு முடிவும் முழு மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டுதான் வழங்கப்படும். ஆனால் இந்த முறை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை கணக்கிடும்போது தசம அடிப்படையில் என்ன மதிப்பெண்கள் வருகிறதோ அதை அப்படியே மாணவர்களுக்கு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக, பிளஸ் 2 வகுப்பு இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவரின் முந்தைய மதிப்பெண்களின் கூட்டுத் தொகை 68.58 என வருகிறது என்றால், அந்த மாணவருக்கு 69 என்று முழுமையாக்காமல், 68.58 என்று தசம அடிப்படையில் கிடைக்கும் மதிப்பெண் இரட்டை இலக்கத்தில் அப்படியே வழங்கப்படும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், குறிப்பாக என்ஜினீயரிங் கலந்தாய்வு போன்றவற்றுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். கட் ஆப் கணக்கீட்டின்போது எந்த ஒரு மாணவரும் பாதிப்படைவதைத் தவிர்க்கவும், குழப்பமின்றி உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தவும் ஏதுவாக புதிய நடைமுறையின் மூலம் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *