செய்திகள்

தங்க நகை கடன் விதிமுறைகள்: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு வெளியீடு

Makkal Kural Official

சென்னை, ஜூன்.8-–

ஒரு ஆண்டுக்கு பிறகும் நகை கடனை புதுப்பிக்கலாம். இனி ரூ.2½ லட்சம் வரையிலான கடன்களுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம் கடன் பெறலாம் என்று ரிசர்வ் வங்கியின் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நகை விலை உச்சத்திற்கு சென்றாலும், அதன் விற்பனை மட்டும் குறைந்தபாடில்லை. எதிர்கால சேமிப்புக்காகவும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் பயன்படுத்து வதற்கும் பொது மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். மேலும் சுமார் 40 சதவீதம் பேர், நகையை வாங்கி அதனை வங்கியில் அடகு வைத்துவிட்டு மீண்டும் அந்த பணம் மூலம் நகை வாங்குகின்றனர். தொடர்ந்து இதுபோன்று சுழற்சி முறையில் செய்கின்றனர்.

எனவே ரிசர்வ வங்கி நகைக்கடன் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதற்கான வரைவு அறிக்கையை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் தங்க நகை மதிப்பில் 75 சதவீதம் தான் கடன் வழங்க வேண்டும். நகை உரிமைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். அதாவது நகை வாங்கிய பில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. சில இடங்களில் போராட்டமும் நடந்தது. இந்த சூழ்நிலையில், ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம் என்றும், நகை கடன் விதிமுறைகளை இப்போதைக்கு நடைமுறைப்படுத்தாமல் அடுத்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை வழங்கியது.

புதிய விதிகள் வெளியீடு

இந்த சூழ்நிலையில், ரிசர்வ வங்கி தங்க நகைக்கடனுகான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவீதம் கடன் வழங்கலாம். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 80 சதவீதமும், ரூ.5 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு நகை மதிப்பில் 75 சதவீதமும் வழங்கலாம் என்று கூறியுள்ளது.

அதே போல் நகை உரிமைக்கான ஆவணத்தை கேட்க வேண்டும் என்ற நிபந்தனையும் அதில் நீக்கப்பட்டுள்ளது.

அதே போல ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு உட்பட்ட கடன் வழங்குவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை. அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு உரிய கிரெடிட் மதிப்பீடு செய்யப்படும். மேலும் ஒரே நபர் அதிக நகைகடன்களை திரும்ப, திரும்ப வாங்குவது பணபரிமாற்ற விதியின் கீழ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

அதே போல் மீட்கப்படாத நகைகளை ஏலம் விடுவது ஆரம்ப விலை நகையின் மதிப்பில் குறைந்தபட்சம் 90 சதவீதம் இருக்க வேண்டும். அதற்கு கீழான மதிப்பில் ஏலம் விடக்ககூடாது. இந்த விதிமுறை எதற்கு என்றால் ஒருவர் நகையை வைத்து மீட்க முடியாமல் போய், அதனை ஏலத்திற்கு விட்டு, அவரின் கடனை முழுமையாக அடைப்பதற்கும், மீதி இருந்தால் உரிமையாளருக்கு அதனை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நகை கடன் புதுப்பித்துக்கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடையும், புதிய அறிவிப்பில் நீக்கப்பட்டுள்ளது. அதாவது 12 மாதம் கழித்து நகை கடன் புதுப்பிக்கப்படாது. அதன் முழு தொகையை கட்டிவிட்டு நகையை மீட்க வேண்டும். பின்னர் மறுநாள் தான் மீண்டும் நகைக்கடன் பெறமுடியம். என்ற இந்த விதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு ஆண்டுக்கு பிறகும் நகைகடனை வட்டியை கட்டியோ அல்லது கூடுதல் நகைகடன் பெற்றோ புதுப்பித்துக்கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *