செய்திகள்

தங்கையை காதலித்த ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு: அண்ணன்கள் கைது

சென்னை, மே.21–

தங்கையை காதலித்த ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய அண்ணன்களை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை, திருவல்லிக்கேணி, பி.எம். தர்கா, ஏ பிளாக்கைச் சேர்ந்தவர் ரகுமத்துல்லா (வயது 26). ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்த சீதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சீதாவின் அண்ணன்கள் ஸ்ரீதர், சீனிவாசன் ஆகியோருக்குப் பிடிக்க வில்லை.

தங்கையை மறந்துவிடும்படி ரகுமத்துல்லாவை எச்சரித்துள்ளனர். இருந்தாலும் ரகுமத்துல்லா – சீதா காதல் மறைமுகமாக வளர்ந்துள்ளது. இதனால் அண்ணன்கள் ஆத்திரமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் ரகுமத்துல்லாவை வழி மறித்து அரிவாளால் வெட்டினர். இதில் ரகுமத்துல்லாவுக்கு தலையில் வெட்டு விழுந்தது. அவர் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டது.

இதுதொடர்பாக ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீதர், சீனிவாசன் இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *