ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியது
3 நாட்களில் ரூ.1,680 அதிகரிப்பு
சென்னை, மார்ச் 14–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 31ம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.
இதன் பிறகு ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
கடந்த 12ம் தேதி செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (13–ந்தேதி) சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,230க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது வரலாறு காணாத அளவில் புதிய உச்சமாகும்.
தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.1,680 அதிகரித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.