சென்னை, மார்ச் 28–
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. சமீபகாலமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும், பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இனி வருங்காலங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.