சென்னை, பிப். 11–
தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்தவகையில் கடந்த டிசம்பர் 8ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஜனவரி 3ம் தேதி ரூ.58,080 ஆகவும், 16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. ஜனவரி 22ம் தேதி சவரன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.
இருப்பினும் கடந்த 29ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. 31-ம் தேதி ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்ரவரி 1ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை இன்றும் உயர்ந்து மற்றொரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை உயர்வால் நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,060-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்புகள் உள்ளிட்ட கெடுபிடிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிப்பதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை இன்னும் உயரவே வாய்ப்புள்ளது என்று மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி தெரிவித்துள்ளார்.