சென்னை, ஏப். 4–
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது.
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடனேயே தங்கம் விலை இருந்து வந்தது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் ஒரு பவுன் தங்கம் ரூ.48 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை கடந்த மாதம் 5-ந் தேதி பதிவு செய்தது.
அதற்கு பிறகு விலை அதிகரித்து, கடந்த 9-ந் தேதி ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தையும் கடந்தது.அதனைத் தொடர்ந்து விலை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்பட்டது. இந்த விலை உயர்வால் கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.
அதற்கு மறுநாளே (29-ந் தேதி) பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரம் என்ற நிலையையும் ஒரே நாளில் தாண்டியது. தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்தது. நேற்று ஏறுமுகத்தில் தங்கம் விலை காணப்பட்டு, மீண்டும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையில் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.84,000-க்கு விற்பனையாகிறது.