சென்னை, பிப். 12–
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்து, சவரன் 63 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சவரனுக்கு ரூ.960 சரிவு
இதற்கிடையே, ஜனவரி 21 ந்தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக கடந்த 1 ந் தேதி தங்கம் விலை 2 முறை உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே, கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்த நிலையில் நேற்று சவரன் ரூ.64ஆயிரத்து 480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.