சென்னை, ஜன. 22–
22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்துடன் ரூ. 60,200-க்கு விற்பனை ஆகிறது.
இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை அண்மைக்காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இருப்பினும் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றவுடன் தங்கம் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மாறாக, மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சவரனுக்கு ரூ.600 உயர்வு
முன்னதாக நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ. 7,450 என விற்பனையானது. அதாவது ஒரு சவரன் ரூ. 59,600 க்கு விற்பனையானது.
இந்தநிலையில் இன்றைய தினம், வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்று தங்கம் ஒரு கிராம் ரூ. 75 உயர்ந்து ரூ. 7,525 க்கு விற்பனை ஆகிறது. அதன்படி, ஒரு சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ 60,200-க்கு விற்பனை ஆகிறது. 60 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடம் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் கிராம் ரூ.104 க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.104,000.00 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.