சென்னை, அக். 19–
சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்குவதும், பின்னர் குறைவதுமாக நீடித்தபடியே இருந்தது.
இந்த நிலையில் கடந்த 16ந் தேதி சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160ம் உயர்ந்து ரூ.57,280 விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.80-ம் சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 240க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 920க்கும் விற்பனை ஆனது.இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240க்கு விற்பனை ஆகிறது.
இதன்மூலம் தங்கம் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,480 அதிகரித்துள்ளது.இதேபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.107க்கு விற்பனையாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி சீசனில் போனஸ் உள்ளிட்ட பணம் வரவு காரணமாக நகை விற்பனை கணிசமாக அதிகரிக்கும். அவ்வாறு நகை வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.