சிறுகதை

தங்கமான தலைவர் – எம்.பாலகிருஷ்ணன்

Makkal Kural Official

மாடசாமி பெரியவர். அவர் அந்த ஊரில் நல்ல மதிப்பு மிக்கவர். எல்லோரும் அவரை விரும்புவர்.

அவர் சொந்தமாக விவசாயம் செய்து வருபவர். மேலும் ஆடுமாடுகள் வளர்ப்பவர்; அவர் விவசாய வேலை மாலையில் முடிந்ததும் அந்த ஊர்ப் பொது சாவடியில் அமர்ந்து கொள்வார். கூடவே நான்கு பேர் அவருடன் உட்கார்ந்திருப்பார்கள்

ஊர் பிரச்சினைகள் ; கோவில் பிரச்சினை என்று பேசிக்கொண்டு பொழுதைபோக்கி விடுவார். சிலநேரம் ஊரில் எதாவது பஞ்சாயத்து என்றால் அந்தப் பொது சாவடியில் இவர் தலைமையில் தான் நடக்கும். அதனால் இவரை அந்த ஊர்த் தலைவர் என்று தான் அழைப்பார்கள். அது போக யாராவது கஷ்டமான நிலையில் இவரைத் தேடிவந்தால் பண உதவியும் பொருளுதவியும் செய்வார்; அப்படிப்பட்ட இரக்ககுணம் கொண்ட மனிதரும் கூட.

இவர் நில புலன் வைத்திருப்பதாலும் நல்லவசதியாக இருப்பதாலும் ஊரில் இவருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் இருக்கும்

ஆனால் இவருடைய வளர்ச்சி அந்த ஊரில் நாகப்பனுக்கும் வேலப்பனுக்கும் பிடிக்காது. அதனால் தலைவர் மாடசாமியிடம் இவர்கள். சரியாக பேசுவதில்லை; இவருக்கு மறைமுகமாக இடையூறுகள் செய்வார்கள்; எப்படியாவது கெட்டப் பெயர் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று இருவரும் நினைப்பார்கள்.

அப்படிக் கெட்டப் பெயர் வாங்கிக் கொடுத்து மாடசாமியை தலைவர் பதவிலிருந்து இறக்கி தாங்கள் அந்தப் பதவியைப் பிடிங்கி நல்லாச் சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

மாடசாமி தலைவர் அவர்களைப் பற்றியும் அவர்களுடைய திட்டங்களைப் பற்றியும் நன்கறிவார். ஆனால் அதைப் பற்றி கவலைபடாமல் இருப்பார்.

ஒருநாள் நாகப்பனும் வேலப்பனும் அவருக்கு எதிராக திட்டம் போட்டனர்.

மறுநாள் காலை ஊர் பொதுமக்கள் சிலர் மாடசாமி வீட்டிற்கு கூட்டமாக கூடிவந்தனர்.

வீட்டிலிருந்த தலைவர் மாடசாமி வெளியேவந்து

என்ன எல்லாரும் வீட்டுவீட்டு வாசல்ல நிக்கிறீங்க. வேலைக்கு போகலையா என்றுக் கேட்க

அய்யா நாங்க உங்கமேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தோம்; இப்படி நீங்களே செய்யலாமா?

நீங்க சொல்லுறது புரியல. நான் என்ன செஞ்சேன் உங்களுக்கு? எனக்கேட்டார்

அதற்கு ஊர்க்காரர்கள், ‘‘அய்யா நீங்க நல்லவர் மாதிரி வேசம் போட்டு எங்கள ஏமாத்திட்டீங்க.

என்ன நான் உங்கள ஏமாத்திட்டேனா?

ஆமாம் அரசாங்கம் விவசாயிகளுக்கு கொடுத்த சலுகைகளையும் மானியங்களையும் நீங்க போலியா பத்திரம் தயார் செஞ்சி எல்லாத்தையும் உங்க குடும்ப பேர்ல மாத்திப் பெரிய பணக்காரனா ஆகிட்டீங்க.

எங்கள ஏமாத்தி அடிமையா வேலை வாங்கி நீங்க வசதியா வாழுறீங்க. இந்த உண்மை இவ்வளவு காலம் தெரியாம இப்பத்தான் எங்களுக்கு தெரிஞ்சிருக்கு என்று ஊர் விவசாயிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர்

மாடசாமி தலைவர் அவர்கள் கேட்ட கேள்விகளால் பெரும் அதிர்ச்சியடைந்தார். ஊர் விவசாயிகள் இப்படி கேட்பார்கள் என்று எள்ளளவும் அவர் நினைத்து பார்க்கவில்லை

பிறகு அவரே பேச ஆரம்பித்தார்:

நீங்க இவ்வளவு காலம் என்னோட இருந்து வேலைபார்த்து நல்லா பழகி இருந்தும் என்னப் பத்தி தெரிஞ்சியிருந்தும் யாரோ வேண்டாதவங்க என்னப் பத்தி தவறா சொல்லிருக் காங்கன்னு நினைக்கிறேன். அத நீங்க நம்பி என்னை சந்தேகப்பட்டு கேட்கிறீங்க. அப்படித்தானே

உங்கள என்னைக்காவது வேற்றுமையா நினைச்சி யிருக்கேனா ? தொழிலாளி முதலாளி அப்படின்னு பிரிச்சி பாத்திருக்கேனா? சொந்தக்காரங்க மாதிரி தானே பழகிவர்றேன்

நீங்க நினைக்கிற மாதிரி உங்க காசுக்கு ஆசைப்பட்டவன் நான் இல்லை. ஒத்த ரூபாயாயிருந்தாலும் உங்க காசுகளை உடனே கொடுக்கக் கூடியவன் நான்

என்னை போயி நீங்க சந்தேகப் பட்டிட்டீங்க. நான் அதுக்கு வருத்தபடலை. அது உங்க அறியாமை.

உங்களுக்கு ஒரு விசயம் சொல்லுறேன் . விவசாயிகளுக்கு அரசாங்கம் பயிர்கடன், தனிநபர் கடன், மழைகாலத்தில் பயிர் நாசமானால் அதுக்கும் நஷ்ட ஈடு ;இப்படி விவசாயிகளுக்கு அரசாங்கம் சலுகைகளும் மானியங்களும் கொடுக்கிறது. செய்திகளிலும் டிவியிலும் அறிவிச்சிட்டு இருக்காங்க.இதை யாராலும் தனிப்பட்ட முறையில ஏமாத்த முடியாது.

அப்படியிருக்குறப்ப உங்களுக்கு சேரவேண்டிய கூலியிலோ உங்க சலுகையிலோ யாரும் ஏமாத்த முடியாது.

இன்னொரு முக்கியமான விசயத்தை உங்க கிட்ட சொல்லபோறேன்.

மாத மாதம் உங்கபேருலையும் உங்க குழந்தைகள் பேருலையும் சேமிப்பு திட்டம் ஆரம்பிச்சி இருக்கேன்.

அது பிற்காலத்தில் உங்க குழந்தைகள் படிப்பு செலவுக்கும் கல்யாண செலவுக்கும்

அவசர செலவுக்கும் உதவுற மாதிரி திட்டம்போட்டு உங்க எல்லாத்துக்கும் தனித் தனி புத்தகம் போட்டிருக்கேன். இதோபாருங்க என்றவாறே அவர் வீட்டிறு்குள் சென்று சேமிப்பு புத்தகங்களை எடுத்துவந்து காட்டினார் தலைவர் மாடசாமி

அவர் வீட்டு வாசலில்நின்ற அத்தனை விவசாயிகளும்

அய்யா எங்கள மன்னிச்சிடுங்க. நாங்க வேண்டாதவங்க சொல்ல கேட்டு உங்கள் மனச நோகடிச்சிட்டோம் என்று கை கூப்பி வணங்கி மன்னிப்பு கேட்டார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *