செய்திகள்

தங்கமணியின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, டிச.20–

அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் மீண்டும் லஞ்சி ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர் பி. தங்கமணி. தற்போது குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்த நிலையில் தங்கமணி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 15ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் தங்கமணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் என அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று தங்கமணிக்கு தொடர்புடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் 2ம் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் 3 இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சாந்தங்காடு பகுதியில் உள்ள தங்கமணி உறவினர் குமார் என்கின்ற கோபாலகிருஷ்ணன் என்பவருடைய வீட்டிலும், ஓண்டிக்காரன் பாளையத்தில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் கல்லூரி நண்பர் செந்தில்நாதன் வீடு மற்றும் திண்டல் சக்தி நகரிலுள்ள பாலசுந்தரம் என்பவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தபோது தங்கமணியின் கணக்கு விபரங்களை பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆடிட்டர் செந்தில்குமார் (வயது 50) என்பவர் தணிக்கை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிப்பாளையம் பேப்பர் மில் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான 2 ஆடிட்டர் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இன்று ஒரே நாளில் நாமக்கல்லில் 10 இடங்கள், சேலத்தில் 1 இடம், ஈரோட்டில் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது கடந்த 15-ந்தேதி கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காட்டி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *