சென்னை, செப். 6–
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.53,760 க்கு விற்கப்படுகிறது.
தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கணிசமாக ஏற்றம் கண்டுள்ளதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப கடந்த மாதம் மட்டும் ரூ.5,000 வரை தங்கம் விலையும் குறைந்தது.
சவரனுக்கு ரூ.400 உயர்வு
தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என்கிற வகையில், அடிக்கடி ஏற்றங்களை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டு இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கலங்கச் செய்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் 6,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,760 க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.92 க்கு விற்பனை செய்யப்படுகிறது.