செய்திகள்

பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை, ஏப். 27–

மதுரை அழகர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை வைகை ஆற்றில், பச்சைப் பட்டுடுத்தி, தங்கக் குதிரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், பக்தர்கள் இன்றி இன்று எளிமையாக நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரை திருவிழா பிரசித்திப் பெற்றது. திருவிழாவில் மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை முக்கிய நிகழ்வுகள் ஆகும். இந்த நிகழ்வைக் காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இக்கோயிலுக்கு வருவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்திரைத் திருவிழா பக்தர்களின்றி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வு நடந்து முடிந்தது. இந்த நிகழ்வைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அனைத்து மக்களும் வீட்டிலிருந்தே திருக்கல்யாணம் நிகழ்வைக் காணும் வகையில், யூ-டியூப், சமூக வலைதளங்கள் மூலம் நேரலை செய்யப்பட்டது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்

அதன் தொடர்ச்சியாக, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அழகர் கோயிலில், வைகை ஆற்றைப் போல் செயற்கையான ஆறு அமைக்கப்பட்டது. அந்த ஆற்றில் புனித வைகை ஆற்றின் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையைச் சூடிக்கொண்டு, பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

அழகர் கோயிலின் தெற்கு பகுதியில் வைகை ஆறு, ஏ.வி.மேம்பாலம் ஆகியவை செயற்கையாக அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் இரண்டாம் ஆண்டாக கள்ளழகர் வைகைக்குப் பதில், கோயிலுக்குள் செயற்கையாக அமைக்கப்பட்ட ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *