சென்னை, ஜூலை 2–
தமிழ்நாட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், தற்போது பச்சை மிளகாய் விலையும் உயர்ந்து கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்கறி வரத்து குறைந்து அனைத்து காய்கறிகளின் விளையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மிளகாய், தக்காளி, இஞ்சி , சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விளைச்சல் குறைவாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாலும், காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
மிளகாய் விலை உயர்வு
குறிப்பாக சமையலுக்கு பிரதானமாக பயன்படுத்த கூடிய பச்சை மிளகாயின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பச்சை மிளகாய் கடந்த வாரத்தில் கிலோ 80 முதல் 120ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதேபோன்று இஞ்சி கிலோ 220 ரூபாய்க்கும், தக்காளி விலை கிலோ 110 முதல் 120 ரூபாய் வரைக்கும், கொத்தமல்லி கிலோ – 80 ரூபாய் க்கும், சின்ன வெங்காயம் -90 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.
மேலும் மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் மழையின் காரணமாக இந்த விலை ஏற்றம் அடைந்துள்ளதாகவும், இந்த விலை ஏற்றம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்வும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது