சிறுகதை

‘தக்காளி சூப்பர்’! – டிக்ரோஸ்

அந்தக் குடியிருப்பில் 200–க்கும் மேற்பட்ட வீடுகள், அதில் ஒரு சில குடும்பங்களில் உள்ளோர் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்து பேசி கொள்வார்கள். அதில் சங்கர், லோகு, கீதா, கமலா, மீனா குடும்பத்தாரும் உண்டு.

–*****–

சென்னை மாநகர வாசிகள் ‘பிற கிரகவாசிகளாக’ குடியேற இருக்கும் நாட்கள் வர சில தசாப்தங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்கா செல்வது ஏதோ ரெயிலில் ஏறி வேறு நகரத்திற்கு புலம் பெயவர்து போல் சகஜமாக இருந்த காலம்!

கீதாவின் கனவு நொறுங்கும் வகையில், அவளது அப்பா சில மாதங்களில் அமெரிக்காவில் குடியேற எல்லோரையும் தயார்படுத்திக் கொண்டு இருந்தார்.

சங்கர், லோகு, கீதா, கமலா இவர்களை விட ஒரு வயது குறைந்த மீனா எல்லோரும் பொறியியல் படிப்புகளை வெவ்வேறு துறைகளில் படித்து முடித்து விட்டு, எம்.பி.ஏ.வையும் முடித்து விட்டு வேலை தேடும் படலத்தில் மூழ்கி இருந்தனர்.

மீனா மட்டும் எம்.பி.ஏ. இறுதி செமஸ்டரை நெருங்கி கொண்டு இருந்ததால், டென்சனின் உச்சத்தில் உலாவிக் கொண்டு இருந்தாள்.

இந்த ஐவரின் கனவும், பிளாஸ்பேக்கில் துவங்கி பல சீசன்கள் படம் பார்க்கும் பிரியர்களுக்கு வசதியாக இருக்கலாம். இது சிறுகதை என்பதால் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

ஐந்தாம் வகுப்பில் சேர்ந்த முதல் நால்வரும் விளையாட செல்வது முதல் சினிமா, டிராமா என்று ஊர் சுற்றுவது வரை நாம் ஒன்றாக செய்ய முடிவு எடுத்ததுடன் சத்தியம் செய்து கொண்டனர்.

மீனா மட்டும் சில ஆண்டுகளுக்கு பிறகு இக்குடியிருப்புக்கு வந்து இவர்களுடன் ஒரே ஸ்கூல் பஸ்சில் பயணித்து, வாழ்க்கை படகிலும் இவர்களோடு இணையும் போது ஒன்பதாம் வகுப்பு வந்துவிட்டது!

இவளது வருகை இந்த நால்வருடன் கூட்டு அமைந்ததில் மீனாவின் அம்மாவின் சமையலும், அவளது அப்பா தாராளமாக கொடுத்து அனுப்பும் பாக்கெட் மணியும் காரணப் பட்டியலில் உண்டு!

நால்வரும், இந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவர்களுக்கு மீனா கொண்டு வரும் மதிய உணவு ரகங்கள்… லெமன் ஜூஸ், மறுநாள் சிப்ஸ், வியாழன் வந்துவிட்டால் அவர்கள் வீட்டு சப்பாத்தி – தக்காளி சமாச்சாரம்.

அந்த தக்காளி பதார்த்ததை தொக்கு என்று குறிப்பிட முடியாது. அது ஜாம் போல் நாவில் பட்டவுடன் உருகி ஓடி விடும் பதத்தில் இருக்கும். கட்டாயம் அதை தக்காளி குருமா என்றும் சொல்லி அதை கேவலப்படுத்தி விட முடியாது.

ஆகவே சாப்பிடும்போது, ‘தக்காளி சூப்பர்’ என்று மட்டும் கூறியபடி சப்பாத்தியையும் மென்று ரசித்தபடி மீனாவை தங்களது வட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.

மீனாவுக்கு தங்களது நோட்ஸ், தேவையான புத்தகங்கள் போன்றவற்றை அவளின் வீட்டிற்கு சென்று கொடுக்கும் போதெல்லாம் அவள் அம்மாவிடம், ‘தக்காளி சூப்பர்’ என்பதை வெட்கமின்றி வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒருவருக்கு ஒருவர் உதவுவது, வீட்டில் வந்து சில பல பொய் சாட்சிகளையும், சத்தியங்களையும் வாரி வழங்குவது என நெருக்கமான நட்பு தொடர்ந்தது, மீனா வரும் முன்பே வியாழக்கிழமை ஸ்பெஷல் ‘தக்காளி சூப்பர்’ சாப்பிட வந்து விடுவார்கள். மீனா பசியோடு வந்து நண்பர்களுடன் சாப்பிடும் நேரத்தில் ஊர், உலக கதைகள் விவாதிக்கப்படும்.

ஒரு நாள் மீனா திடீரென ‘கேம்பஸ் ஜாப்’ கிடைத்த செய்தியை சொல்லும் போது மீதி நால்வரும் மௌனமானார்கள்.

நால்வரும் கையில் கிடைத்த கனியாக வந்த வேலைகளை எல்லாம் ‘சீச்சி, இந்த பழம் புளிக்கும்’ என்று உதறிய சம்பவங்கள் நினைவுக்கு வர, இதயம் கணக்க தானே செய்யும்!

மீனாவோ அந்த கனத்தில் இருந்த பேக்ரவுண்ட் சோக மியூசிக்கை கவனிக்காமல் தன் குதூகலத்தை துள்ளல் இசையாய் வெளியிட அங்கே மெலடியை எதிர்பார்க்கவா முடியும்?

––––*****–––

அன்று கமலாவின் பிறந்தநாள், அங்கு கேக் கட்டாயம் உண்டு!

வந்தவர்கள் யாரும் அவளுக்கு கிப்ட் ஏதும் கொண்டு வரவில்லை என யோசிக்காதீர்கள். அதை பிளஸ் டூ முடிக்கும்போதே நமக்குள் யாரும் பரிசு கொடுத்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்து அதை சத்திய பிரமாணமாக ஏற்றுக் கொண்டனர்.

கல்யாணப்பரிசு பற்றிய எண்ணம் இதுவரை யாருக்கும் எழவேயில்லை, ஒருவருக்கு ஒருவர் காதல் கொள்வதிலும் வாய்ப்பே இல்லா நட்பு உறவு மேலோங்கி இருக்க அந்த கன்றாவி நமக்குள் வேண்டாம், வேறு ஒருவர் கிடைத்தால் அதை பற்றி கூட்டாக முடிவு செய்வோம் என்று இருந்தனர்.

––––*****–––

இந்தக் கட்டத்தில் தான் அந்த பிரிதல் படலத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தது, ‘தக்காளி சூப்பரும்’ விரக்தியுடன் சாப்பிடப்பட்டது.

சங்கரிடம் தான் அந்த மாற்றம் முதன்முதலில் வெளிவந்தது.

‘என்ன டல்லா இருக்கிற, என லோகு கேட்டான். மிஸ்டர் இப்படி சீரியஸ் முகமாக இருப்பதும் அழகாகத் தான் இருந்தாலும் எனக்கு பிடிக்கல என கூறியது கீதா.

துருவி, துருவி கேட்க, தனது தவிப்பான தருணம் பற்றி நாளை தெளிவாக கூறுகிறேன் என்று சங்கர் கூறியபடி அங்கு இருந்து தப்பித்து வெளியேறினான்.

–––*****–––

வீட்டின் அருகே பஸ் நிறுத்தம் கிடையாது, ஆனால் ‘சேர் ஆட்டோ’ வசதியாக வந்து போகும். கீதாவும் நால்வரையும் முந்திச் செல்ல ஆர்வமின்றி மெல்ல நடைபோட்டபடி பின்தொடர ஒரு ‘ஷேர் ஆட்டோ’ வர, நால்வரும் ஏறிட, தனக்கு காத்து இருக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அன்னநடையை வேகப்படுத்திட முற்பட்ட போது தான் அவளுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ‘அண்ணா போகலாம்’ என்று மீனா கூறிவிட ‘பட்பட’ என அதிர்ந்து குலுங்கியபடி நகர்ந்தது.

‘டேய் எனக்கு வெயிட் பண்ணுங்க…’ என கூறியபடி ஓடிவர ஆரம்பித்த கீதாவை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

அந்த பிரதான சாலையில் இருந்து திரும்பி மறைவதை ‘திருதிரு’ என முழித்தபடி கையை தூக்கி நிறுத்த முயற்சிப்பதை கண்ணாடி வழியே கண்ட டிரைவர், நண்பர்களுக்கு ‘டாடா பைபை’ செய்கிறாள் என நினைத்தபடி தன் பணியில் மும்முரமானான்.

‘என்ன ஏன்டா விட்டுட்டு போனீங்க…’ என கீதா கோபமாய் கேட்டபோது, சங்கரும் லோகுவும் மழுப்பல் பதில்கள் தந்தனர்.

––––****–––

பிறகு ஐஸ்கிரீம் கடையில் இருந்து வெளியேறி கொண்டு இருப்பதை பார்த்தது முதல் ஒரு மாலை ‘தக்காளி சூப்பரை’ சாப்பிட்டுவிட்டு தனக்கு ஒரு வாய் சாப்பிட வழியின்றி போன நிலை வர கீதாவை பொரும செய்தது. பொறுமைசாலியான கீதா இவர்கள் தன்னை உதாசீனப்படுத்துகிறார்கள் என உணர்ந்து அவளும் தன் வழியே தனியாக வாழ முடிவு செய்தாள்.

இந்த பிரிவு படலம் நீண்ட நெடிய படலமாக வேண்டாம் என்பதால் நடந்த உண்மையை கூறிவிடுகிறேன். கீதாவின் அப்பா யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தபோது அதை கேட்டுக்கொண்டு இருந்த சங்கர் கவலையுடன் அந்த அதிர்ச்சி செய்தியை கீதா தவிர மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டான்.

அதன் சாராம்சம்… கீதாவின் குடும்பம் பணி நிமித்தமாக நாடு விட்டு பயணிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது! அது அமெரிக்காவோ, ஐரோப்பாவாக கூட இருக்கலாம்… என கூறியதை கேட்ட சங்கர் மற்றவர்களிடம் ஆலோசித்த போது உருவான திட்டம் தான் கீதாவை ஒதுக்கி வைத்து விடுவது.

ஏன் என்று கேட்கிறீர்களா? ‘நாம் நால்வராக கீதாவின் பிரிவை சந்திக்க, அவளோ தனியாக அல்லவா இந்த பிரிவை அனுபவிப்பாள்’

இந்த லாஜிக்கின் அடிப்படையில் நம்மை அவள் வெறுத்து ஒதுக்கிவிட்டால் அப்படி ஒரு நிலை வராது அல்லவா?

அவர்கள் எதிர்பார்த்தபடி கீதா தங்களை வெறுப்பதை பார்த்தபோது மனம் பாடுபட்டாலும் ‘கீதாவின் நலனுக்காக’ என தேற்றிக் கொண்டனர்.

ஆக கதை இந்த படலத்தோடு முடிகிறதா? அப்படி சொல்லவும் முடியாது! காரணம் இந்த கட்டத்தில் தான் கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக பயணங்கள் முதல் அடுத்த வீட்டிற்கு செல்வது வரை எல்லாமே தடைப்பட்டது.

ஒருமுறை சங்கர் குப்பையை கொட்ட வெளியே நடைபோட சென்ற நேரத்தில் கீதாவின் அம்மா இவனை பார்த்து ‘சங்கரு, வீட்டிலேயே இருந்து பார்க்கும் ‘work from home’ ஒரு பெரிய தலைவலி என கூறியபடி, தங்களது வெளிநாட்டு பணி ஆணை ரத்தாகி விட்டதாக கூறி புலம்ப, சில நிமிடங்களில் கீதா வீட்டில் மீண்டும் ‘தக்காளி சூப்பர்’ தடபுட விருந்துடன் கீதா மீது அன்பை பொழிந்து ஆனந்த தாண்டவம் ஆடினர். கீதாவுக்கோ ஒன்றும் புரியவில்லை!

அக்கம் பக்கம் வீடுகளில் தவழ்ந்து கொண்டு இருந்த கொரோனா சோகத்தினிடையே இப்படிப்பட்ட கூச்சல் கொண்டாட்டம் அவசியமா? என்ற விவாதமும் அந்த கனமே எழுந்ததில் வியப்பில்லை!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *