சிறுகதை

தக்காளி சாதம் | ராஜா செல்லமுத்து

மதிய சாப்பாட்டு வேலைக்கான நேரம் கொஞ்சம் அதிகரித்துவிட்டதால் வேலு கொஞ்சம் வேகவேகமாக நடந்து வந்தான் . அப்போது ஜெயராஜ் நானும் சாப்பிட வருகிறேன் என்று செல்போனுக்கு போன் செய்து வேலுவிடம் விசயத்தை சொன்னான். வேலு முன்பு நடந்ததை விட சற்று வேகத்தை குறைத்து நடக்கலானான்.

அவன் சாப்பிடும் சுபா ஹோட்டலுக்கும் அவனுக்கும் 300 மீட்டர் இடைவெளியே இருந்தது.

எப்படியும் ஜெயராஜ் வந்த பிறகு தான் சாப்பிட முடியும் என்பதை நினைத்த வேலு சுபா ஹோட்டல் அருகே வந்தான்

ஜெயராஜ் போன் செய்தான்.

இன்னும் பத்து நிமிடங்களில் வருவதாக ஜெயராஜ் பதில் சொன்னான்

அப்போது அந்த ஹோட்டலின் அருகே ஒரு பெண்மணி தன் கையில் பையுடன் அரக்கப்பரக்க நின்று கொண்டிருந்தார்.

அவள் யாருக்காகவோ காத்திருப்பதாக அவளின் பார்வையில் தெரிந்தது. ரோட்டை பார்ப்பதும் ஆட்களை பார்ப்பதுமாக இருந்தார்.

வேலு ஜெயராஜுக்காக காத்திருந்தான். அந்த இடைவெளியில் அந்தப் பெண்மணி, வேலுவிடம் வந்தார் மேலும் வேலு வைப்பார்த்த பெண்மணி

மணி எத்தனை? என்று கேட்டார்

முதலில் தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்த வேலு கடிகாரத்தை பார்ப்பதை விட்டுவிட்டு தன் கையில் இருந்த செல்போனை ஆன் செய்து 2 20 என்று மணி சொன்னான்.

அந்தப் பெண் வேலுவை ஒரு மாதிரியாக பார்த்தாள். வேலுவிடம் ஏதோ கேட்பதாக நினைத்தார். தொண்டை வரை வந்த வார்த்தை உதட்டில் நின்று கொண்டது.

அவளால் பேச முடியவில்லை.

வேலு அந்தப் பெண்மணியைப் பார்த்தான். அந்தப் பெண்மணி தன்னிடம் எதையோ கேட்பது போன்று தெரிந்தது.

அந்தப் பெண்மணியின் அருகே போன வேலு.

அம்மா என்ன வேணும்? ஒரு மாதிரி இருக்கீங்களே ?என்று கேட்டான்.

ஒன்னும் இல்லப்பா …என்றாள் அந்த பெண்.

அவள் சொல்லும்போது நா தழுதழுத்தது.

சொல்லுங்கம்மா? சாப்பிட்டீங்களா ? என்று வேலு கேட்டான்.

இல்லை என்று தலையாட்டினாள்.

நீங்க சாப்பிட்டீங்களா? என்று அந்தப் பெண்மணி வேலுவைத் திருப்பி கேட்டாள்.

என்னோட பிரண்டு வாரா; அதுக்குத்தான் நிற்கிறேன் என்று வேலு சொல்ல

அதற்கு அந்த அம்மா எந்த பதிலும் சொல்லவில்லை.

நீங்க யாருக்காக நிக்கிறீங்க? என்று வேலு கேட்டார்.

அந்தம்மா உதட்டை பிதுக்கினாள்.

சாப்பிடுறீங்களா? என்று அந்த அம்மாவிடம் கேட்டதும் சந்தோசமாக தலையாட்டினாள் அந்தம்மா.

ஜெயராஜ் வருவதற்குள் அந்த அம்மாவிற்கு என்ன வேண்டும் என்று வேலு கேட்டார்.

எனக்கு தக்காளி சாதம் போதும் என்று சொன்னார் அந்த அம்மா.

அந்தக் கடையில் தக்காளி சாதத்திற்கான பில்லை வாங்கிக்கொண்டு வந்து அந்த அம்மாவிடம் கொடுத்தான்.

அந்த அம்மாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.

அம்மா ஏன் அழுகிறீங்க? சாப்பிடுங்க என்று சொன்னான்.

எதுவும் பேசாமல் அந்தப் பில்லை வாங்கிய அம்மா உணவு கொடுக்கும் கவுண்டருக்கு போனார்.

அதற்குள் ஜெயராஜ் வந்துவிட்டான்.

என்ன சாப்பிடலாம்? என்று ஜெயராஜ் கேட்டான்.

‘‘உனக்கு எது பிடிக்கிதோ அதுதான் ’’

வா என்று ஜெயராஜ் கூட்டிப் போனான்.

ஒரு அசைவ உணவகம் சென்று சாப்பிட்டார்கள். வேலுவுக்கு முன்னால் சாப்பிட்ட ஜெயராஜ்.

ஓடிப்போய் பில்லைக் கொடுத்தான்.

வேண்டாம் …நான் பில் கொடுக்கிறேன் என்று வேலு சொன்னான்.

ஜெயராஜ் சாப்பிட்ட மொத்த பில்லையும் கொடுத்தான்.

40 ரூபாய்க்கு ஒரு பெண்மணிக்கு தக்காளி சாதம் வாங்கிக் கொடுத்தது, வேலுவின் ஞாபகத்திற்கு வந்தது.

400 ரூபாய்க்கு சாப்பிட்டத தன் நண்பன் கொடுத்தது பெரிய தொகை என்று வேலுவுக்கு புரிந்தது.

நாம் ஒன்று செய்தால் கடவுள் அதை பன்மடங்காக உயர்த்தித் தருவார் என்பதை உணர்ந்து கொண்டான்…வேலு .

சாப்பிட்டு முடித்து தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்

தக்காளி சாதம் சாப்பிட அந்த தாய் தன் கையில் பையை எடுத்துக்கொண்டு, முன்னைவிட கொஞ்சம் புத்துணர்ச்சியோடு அந்தத் தார் சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.

வேலு இதைப் பார்த்தான்.

அந்த அம்மாவிற்கு உணவு வாங்கிக் கொடுத்ததை தன் நண்பன் ஜெயராஜிடம் அவன் சொல்லவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *