சிறுகதை

தகுதி | ஆவடி ரமேஷ்குமார்

மேனேஜர் சத்தியமூர்த்தி திடீர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் ஒரு வாரம் ஆகிவிட்டது.

‘ இனி அடுத்த மேனேஜர் நான் தான்’ என்று நினைத்துக் கொண்டிருந்த ஹெட்கிளார்க் சதாசிவத்தின் எண்ணத்தில் இடி விழுந்தது.

ஆம். சதாசிவத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து பணியில் சேர்ந்த கிளார்க் ரவிகுமார் தான் இனி கம்பெனியின் அடுத்த மேனேஜர் என்று எம்.டி.முடிவெடுத்து பதவியில் அமர்த்திவிட்டார்.

அறுபது பேர் வேலை பார்க்கும் அந்த நிறுவனத்தில் ஹெட் கிளார்க்காக இனியும் வேலை பார்ப்பது அவமானம் என்று கருதிய சதாசிவம் ராஜினாமா கடிதம் ஒன்றை எழுதி எடுத்துக்கொண்டு எம்.டி.யின் அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தார்.

கடிதத்தை படித்த எம்.டி. அதிரவில்லை.

” உட்காருங்க சதாசிவம்” என்று புன்னகை பூக்க சொல்லிவிட்டு, அவர் எழுந்து அருகிலிருந்த பீரோவை திறந்து அதிலிருந்து ஒரு பைலை எடுத்து டேபிள் மேல் வைத்தார்.

” ஆக, ரவிகுமார் மேனேஜரானது உங்களுக்கு பிடிக்கலை.அவர் கம்பெனியில் சேர்ந்து ஒரு மாதம் கழித்து எனக்கு பத்து பக்கத்தில் எழுதிய கடிதம் இது.

இது மாதிரி அடிக்கடி கடிதம் எழுதினார். நானும் மேனேஜர் சத்தியமூர்த்தியும் அவரின் கடிதத்தை படிச்சு அசந்து போய்ட்டோம். அவருடைய அப்சர்வேஷன் மைன்டை நினைக்க எங்களுக்கு பெருமையா இருந்தது. ம்…நீங்க கூட படிச்சுப் பாருங்க சார். அவர் மேனேஜர் பதவிக்கு தகுதியானவரானு தெரிஞ்சுக்குவீங்க.”

பைலை எடுத்து சதாசிவத்திடம் மரியாதையாக நீட்டினார் எம்.டி.

பைலில் இருந்த கடிதம் ஒன்றின் மீது பார்வையை படரவிட்டார் சதாசிவம்.

‘ அலுவலக நிர்வாகம் சிறப்பாக செயல்பட எனது யோசனைகள்’ என்ற தலைப்பில் கடிதம் ஆரம்பமாகியிருந்தது.

படிக்க… படிக்க… வேலைக்கு சேர்ந்த ஒரே மாதத்தில் கம்பெனி நிர்வாகத்தை உற்று கவனித்து அதில் உள்ள நிறை குறைகளை விமர்சித்து தனது வித்தியாசமான, ஆக்கப்பூர்வமான யோசனைகளையெல்லாம் எழுதியிருந்தார் ரவிகுமார்.

அசடு வழிய எம்.டி.யை பார்த்தார் சதாசிவம்.

” சார், ஆபீஸ்க்கு வந்தோமா சம்பளத்துக்காக பெஞ்சியை தேய்ச்சோமானு இல்லாம இந்த ரவிகுமார் ரொம்ப பொறுப்பா நடந்துக்கிட்டதோடு கம்பெனிக்கு லாபம் வர்ற மாதிரியான யோசனைகளை அள்ளி அள்ளி வழங்கினார்.

அதற்கப்புறம் கடிதம் மூலமாக எழுதறதை விட்டுட்டு வாய் மொழியா நிறைய பேசினார்.

எனக்கும் சத்தியமூர்த்தி சாருக்கும் அவரை ரொம்ப பிடிச்சுப்போச்சு. சரி இப்ப சொல்லுங்க. உங்க ராஜினாமா கடிதத்தை நான் ஏத்துக்கட்டுமா?” எம்.டி. கேட்டார்.

கர்சீப் எடுத்து முகத்தை துடைத்த சதாசிவம்,

” ஸாரி ஸார்.என் கடிதத்தை நான் வாபஸ் வாங்கிக்கிறேன்.

அதே சமயம் நான் ரவிகுமார்க்கு கீழே சந்தோஷமா வேலை பார்க்க ஆசைப்படறேன் ஸார்” என்றார்.

எழுந்து நின்று சதாசிவத்திற்கு கை கொடுத்து குலுக்கி மரியாதையாக அனுப்பி வைத்தார் எம்.டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *