செய்திகள்

தகவல் தராத 7 பேர் : தனிமைப்படுத்தி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Spread the love

துறையூர், மார்ச்.29-

துறையூர் ஓங்காரக்குடிலில் வெளிநாடு சென்றுவந்து தங்கியிருந்த 7 பேரை நகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்து நேற்று (28ம் தேதி) தனிமைபடுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

துறையூர் ஓங்காரக்குடிலில் தகவல் தராமல் தங்கியிருந்த மலேசியாவைச் சேர்ந்த 6 பேர் மீதுகடந்த 26ம் தேதி போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த 7 பேர் ஓங்கார குடிலில் தங்கியிருக்கும் தகவல் நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து நகராட்சி கமிஷனர் (பொ) தமயந்தி தலைமையில் சுகாதார அலுவலர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று (28ம் தேதி) மதியம் ஓங்காரக் குடிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் குவைத்திலிருந்து ஐதராபாத் வந்து இறங்கியதும் அதன்பின்னர் கடந்த 14ம் தேதி ஓங்காரக்குடில் வந்து தற்போதுவரை தங்கி இருப்பதும் தெரிந்தது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டி உள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். ஓங்காரகுடிலில் தகவல் தராமல் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள் தங்கியிருந்து நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது சம்பவமாகும். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இனிமேலும் தகவல் தராமல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஓங்காரக்குடிலை மூடி சீல் வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென குடில் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *