செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்: 67 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோ, ஜூலை 21–

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் உள்பட 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதால் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக கடந்தாண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டிகள் தற்போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயாராகி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளி்க்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் வீராங்கனைகள் டோக்கியோ நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் டோக்கியோ விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சரியான முடிவுகள் வெளியான பின்னர் பாதுகாப்பான முறையில் அவர்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி திடீரென வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செக் குடியரசு பீச் வாலிபால் அணி பயிற்சியாளர் சைமன் நாஷ்க்கு கொரோனா தொற்று உறுதியானது. முன்னதாக அதே அணி வீரர் பெருஸிக் தொற்றால் பாதிக்கப்பட்டார். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்த பணிகளை கவனிக்கும் தன்னார்வ தொண்டர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது. போட்டிக்காக பணியாற்றும் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டி கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் 2 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு மெக்சிகோ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இருந்த மெக்சிகோவின் பேஸ்பால் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்த அணியின் உள்ள மற்ற வீரர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

டோக்கியோவில் போட்டிகள் நடைபெறும் கிராமத்தில் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்படத் தொடங்கியிருப்பதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *