செய்திகள்

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

Makkal Kural Official

அரசியல், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை – பிரதமர் மோடி கண்டனம்

நியூயார்க், ஜூலை 14–

‘அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை’ என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. டிரம்ப் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் டொனால்ட் டிரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர், பாதுகாவலர்கள் அவரை மேடையிலிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். காயமடைந்த டொனால்ட் டிரம்ப் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மோடி கண்டனம்

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது சிறப்பு பாதுகாப்புப் படை நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த வகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ‘அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்றும், டொனால்ட் டிரம்ப் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *