சினிமா செய்திகள்

டைரக்டர் சுசீந்திரனின் “வள்ளி மயில்”: நாடகக் கலைஞர்களுக்கு தனி கவுரவம்!

‘‘1980களில் நடக்கும் கதை; இந்திய சினிமாவில் பேசப்படும்’’

“வள்ளி மயில்”: நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம். 1980களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இவ்விழாவில் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி பேசுகையில், ‘குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிகொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’. இந்த திரைப்படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று நம்பிக்கையோடு கூறினார்.

பீரியட் படம்

ஆடை வடிவமைப்பாளர் ராதிகா பேசுகையில், ‘1980 காலகட்டத்தில் படம் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம்’ என்றார்.

கலை இயக்குனர் உதயகுமார் பேசுகையில், ‘‘பீரியட் படம் பண்ணுவது சவாலான விஷயமாக இருக்கும். ஒவ்வொரு கலை இயக்குனருக்கும் பீரியட் படம் பண்ண வேண்டுமென்பது கனவு. எனக்கு இந்த படத்தில் அது நிறைவேறியுள்ளது’’ என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், விஜய் ஆண்டனி சார் கதாநாயகன் ஆன பிறகு, நான் அவருக்கு எழுதும் முதல் பாடல் என்று கூறினார்.

அறந்தாங்கி நிஷா

நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், ‘‘கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனி மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார். வள்ளி மயில் திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.

நடிகை ஃபரியா அப்துல்லா பேசுகையில், நான் தியேட்டர் கலைஞராக தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரன் உடைய பொறுமை தான், இந்த கதை சிறப்பாக உருவாக காரணம் என்றார்.

4 வருடமாக எழுதிய கதை

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், ‘‘இந்தப் படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. நடிகை கல்பனாவின் மகள், கனி அகத்தியன் அறிமுகமாகிறார்கள் என்றார்.

எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன் என்றார் இயக்குனர்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், இந்த படத்தில் சுசீந்திரனிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன். படத்தை தரமாக உருவாக்குகிறார் என்றார்.

டி.இமான் இசை. பாஸ்கர் சக்தி – வசனம். ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி

அறிமுக விழாவில் ‘வெண்ணிலா’ பெயரில் அறக்கட்டளை ஒன்றை தன் தந்தையின் ஆசியோடு துவக்கினார் சுசீந்திரன். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் சதீஷ் (எய்ம்) வரவேற்றார். பத்திரிகையாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.