தலையங்கம்
1912–ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, இன்று, உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக புறப்பட்ட டைட்டானிக், பனிப்பாறையில் மோதியதன் மூலம் வரலாற்றில் நீங்கா தடமொன்றை பதிவு செய்துவிட்டது. இந்தப் பேரழிவில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். இன்றுடன் அந்த வரலாற்று நாளின் நினைவையும் நாம் பகிர்ந்துகொள்கிறோம்.
இந்த உணர்வுப் பெருக்கத்தைத் தெளிவாக்கும் வகையில், டைட்டானிக் கப்பலை மையமாகக் கொண்டு ‘Titanic: The Digital Resurrection’ என்ற புதிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்திற்காக, ஒரு முழுமையான முப்பரிமாண டிஜிட்டல் ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.டைட்டானிக் என்பது ஒரு கப்பல் மட்டுமல்ல – அது ஒரு வரலாற்றுப் பொக்கிஷம், மனிதர்களின் வீரத்தையும், தவறுகளையும் உணர்த்தும் நினைவுச் சின்னமாகும்!
அட்லாண்டிக் பெருங்கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை, நீருக்கடியில் இயங்கும் ரோபோக் கருவிகள் – ரோமியோ மற்றும் ஜூலியட் – மூலம் இந்த ஸ்கேன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு “டிஜிட்டல் டைட்டானிக்” உருவாக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பிபிசி மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்கேன், டைட்டானிக் கப்பலின் முழுமையான மற்றும் விரிவான காட்சியை முதன்முறையாக அளிக்கிறது.
கொதிகலன் அறையின் புதுத் தோற்றம்
இந்த ஸ்கேன், டைட்டானிக்கின் மிகப்பெரிய கொதிகலன் அறைகளில் ஒன்றின் உள்ளமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. இது, கப்பல் இரண்டாக உடைந்த இடத்தில் – முன்பகுதியின் கடைசியில் – அமைந்துள்ளதால், ஸ்கேனில் தெளிவாக காணப்படுகிறது.
அந்த அறையில், பொறியாளர்கள் இறுதியளவிற்கு நிலக்கரியை உலைகளில் நிரப்பி, கப்பலின் விளக்குகள் அணையாமல் பாதுகாக்க பாடுபட்டனர். அவர்கள் வீரத்தால் பல பயணிகள் தப்பிய உயிர்கள், இன்று அவர்களின் நினைவாகவும் நன்றியளிக்கும் கணமாகவும் அமைகிறது. மூழ்கிய பின்னணியில் மறைந்த காரணங்கள்
ஸ்கேனில் மேலும் கண்டுபிடிக்கப்பட்டது, கப்பலின் மேல் பகுதியில் காணப்படும் சிறிய திறந்த ஜன்னல்கள் போன்ற துளைகள், கப்பல் விரைவாக நீரில் மூழ்கக் காரணமாக அமைந்திருக்கலாம் என்பது.
இது மட்டுமல்லாமல், பனிப்பாறையால் உடைக்கப்பட்ட ஜன்னல் போன்ற அமைப்புகள், சாட்சியங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சில பயணிகள் அறைகளுக்குள் பனிக்கட்டிகள் நுழைந்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறிய வாக்குமூலங்களும் இவையுடன் ஒத்துப்போகின்றன.
டைட்டானிக் கப்பலின் முன்பகுதி கடற்பரப்பை நோக்கி நேராக உள்ளது. ஆனால் சுமார் 600 மீட்டர் தொலைவில் அமைந்த பின்பகுதி முற்றிலும் சிதைந்து, உலோக குவியலாகவே காணப்படுகிறது.
மின்னோட்ட உற்பத்திக்காக வேலை செய்த இயந்திரங்களில் ஒரு திறந்த ‘வால்வு’ போன்ற அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நீராவி கப்பலின் மின் உற்பத்தி அமைப்பிற்கு சென்றதை வெளிப்படுத்துகிறது.
“டைட்டானிக் கப்பலை முழுமையாக மீண்டும் உருவாக்க நவீன கணினி மாதிரிகள், சூப்பர் கம்ப்யூட்டிங் மற்றும் மேம்பட்ட எண்ணியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம்” என்கிறார் ஆராய்ச்சித் தலைவர், லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியோம்-கீ பைக்.
இந்நவீன முயற்சியின் மூலம், ஒரு நூற்றாண்டுக்கு மேலான வரலாற்று பேரழிவின் பின்னணியில் இன்னும் பல புதுப்பட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
டைட்டானிக் கப்பல் மூழ்கியது பற்றிய செய்திகள் பரவ, உலகமே சோகத்தில் மூழ்கியது, மேலும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியது, அதன் தொடர்ச்சியாகவே கடலில் வாழ்க்கை பாதுகாப்புக்கான ஆக்கப்பூர்வ சர்வதேச மாநாடு, ‘SOLAS’க்கு வழிவகுத்தது.
![]()





