நியூயார்க், ஜூன் 23–
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலைப் பார்வையிட 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக மீட்புக் குழுவினர் அறிவித்ததையடுத்து, அதில் பயணம் செய்த பாகிஸ்தானிய தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. ஏப்ரல் 14-ம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதி நீரில் முழுவதுமாக மூழ்கியது. இந்த கோர விபத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1500 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 110 ஆண்டுகள் ஆனாலும் கப்பல் பயண வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது.
கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கிடந்தது 1985ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆனால் கடும் சேதம் அடைந்ததால் டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேலே இழுத்து வர முடியவில்லை. அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்புக்காக திரைத்துறையினரும் சென்று வருகின்றனர்.
5 பேர் பலி
இந்நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அழைத்து செல்லும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்தது. டைட்டன் நீா்மூழ்கி என அழைக்கப்படும் அதில் 5 பேர் பயணிக்க முடியும்.
இந்நிலையில், டைட்டானிக் கப்பலை பார்க்க, கடந்த 19ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி மூலம் பாகிஸ்தான் தொழிலதிபர், அவருடைய மகன் உள்ளிட்ட 5 பேர் ஆழ்கடல் சுற்றுலா சென்றனர். அதில் 3 சுற்றுலா பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி என மொத்தம் 5 பேர் இருந்தனர். பயணத்தை தொடங்கிய சுமார் இரண்டு மணி நேரத்திலேயே நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து நீர்மூழ்கியை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், நீர்மூழ்கி வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் இறந்துவிட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது. நீர்மூழ்கியில் சென்ற 5 பேரையும் இழந்துவிட்டதாக ஓஷன்கேட் நிறுவனமும் கூறியுள்ளது.