செய்திகள்

டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம்

சென்னை, ஆக.30–

18–வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) ஆடவர் குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ், சத்தியன் ஆகிய 3 வீரர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் உயரிய ஊக்க தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்துக் கடிதங்களையும் முதல்வர் அனுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக 3 வீரர்களுக்கும் தனித்தனியாக முதலமைச்சர் அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

இந்தோனேஷியா ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ், சத்தியன் உள்பட 5 பேர் கொண்ட குழு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சாதனைக்காக எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு பதக்கம் வென்று மாநிலத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெண்கல பதக்கம் பெறும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி, இந்தத் தொகையைப் பெற தாங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். பதக்கம் வென்ற உங்களுக்கும், உங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன்’

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்த 3 வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில், தலா ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ.60 லட்சம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *