செய்திகள்

டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

மும்பை, ஏப். 15–

ஐ.பி.எல். டி20 போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் 7வது ஆட்டத்தில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடந்த ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்வதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதால், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது

கேப்டன் சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். அவர், பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 7 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் குவித்தார். எனவே, டெல்லிக்கு எதிரான ஆட்டத்திலும் சாம்சனின் அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான மனன் வோரா, ஜோஸ் பட்லர், ஷிவம் துபே, ரியான் பராக், ராகுல் தெவேதியா ஆகியோர் சிறப்பாக ஆடுவது முக்கியமானதாகும். அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ்க்கு கடந்த போட்டியின் போது கை விரலில் அடிபட்டதால், அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசுவது முக்கியமானதாகும்.

ரபடா கூடுதல் பலம்

டெல்லி அணியைப் பொருத்தவரையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவான அணியாக உள்ளது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஷிகர் தவன், பிரித்வி ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், அஜிங்க்ய ரஹானே என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், ஆவேஸ்கான் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், அமித் மிஸ்ரா கூட்டணியும் சிறப்பாக உள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தல் முடிந்து திரும்புவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *