பாஜக 104 இடம், காங்கிரஸ்–10 இடம்
டெல்லி, டிச. 7–
டெல்லி மாநராட்சி தேர்தலில் 250 இடங்களில் 134 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, ஆம் ஆத்மி கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்றுள்ளது.
தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 250 வார்டுகளின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 250 வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறித்தியிருந்தது. காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இது தவிர சுயேச்சைகளும் போட்டியிட்டனர். 2020ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தையடுத்து, நடைபெற்ற இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
ஆம் ஆத்மி கொண்டாட்டம்
இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. டெல்லி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களிலும், பாஜக 100 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் மற்றவர்கள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில் இதுவரை ஆம் ஆத்மி கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு 272 வார்டுகளில் 181 வார்டுகளை பாஜக கைப்பற்றியிருந்தது. ஆம் ஆத்மி 48 வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 27 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், ஆம் ஆத்மி கட்சி இந்த முறை வெற்றி பெறும் என கணித்திருந்தது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாரதீய ஜனதாவிடமிருந்து, ஆம் ஆத்மி மாநகராட்சியை கைப்பற்றியதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.