டெல்லி, மார்ச் 2–
கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாரதீய ஜனதா டெல்லியில் போராட்டம் நடத்தியது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டிற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மூளையாக செயல்பட்டவர் என்று கூறி, அவர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பா.ஜ.க நேற்று 15 முக்கிய சாலை சந்திப்புகளில் போராட்டம் நடத்தியது. அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ராஜினாமாவை குறிப்பிட்டு இது ‘உண்மை மற்றும் மக்களுக்கு கிடைத்த வெற்றி’ என்று பா.ஜ.க தலைவர்கள் கூறினர்.
ராஜினாமா செய்ய வேண்டும்
பாஜக மேலும் கூறும்போது, அதிஷி, சௌரப் பரத்வாஜ் என யாரை வேண்டுமானாலும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சராக நியமிக்கலாம். சீட்டுக் கட்டில் 52 அட்டைகள் இருப்பது போல் இந்தத் தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். ஒட்டுமொத்த கட்சியினரும் ஊழல்வாதிகள் என்பதால், தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினர். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபானக் கொள்கை ஊழலை வீடு வீடாகச் சென்று மக்களிடம் தெரிவிப்போம்’ என்று கூறியதுடன், தொடர்ந்து 3 ந்தேதியும் போராட்டம் தொடரும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.