டெல்லி, டிச. 13–
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு), ‘இந்திய மொழிகள் தினம்’ ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.
‘இந்திய மொழிகள் தினம்’, கடந்த மாதம் இந்திய கல்வித்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்விழாவின் முதல் நாளில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றிய ஜேஎன்யுவின் துணைவேந்தர் சாந்தி ஶ்ரீபண்டிட், “இந்தியர் ஒவ்வொருவரும் ஏதேனும் மூன்று மொழிகளையாவது கற்க வேண்டும். இந்தி, உருது, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள் தான்.
தமிழ் பண்பாடு சிறந்தது
நம் தமிழ் மொழிக்கான பண்பாடு மிகவும் சிறந்தது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஜேஎன்யு முனைப்புடன் உள்ளது. இதையொட்டி அனைத்து இந்திய மொழிகளுக்கும் தனி மையங்களும் இந்திய மொழிகளின் பள்ளியும் புதிதாக உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக இந்தித்துறை பேராசிரியர் லட்சுமி, ‘பாரதியாரின் பாடலில் தேசிய கருத்துகள்’ எனும் தலைப்பில் பேசினார். எழுத்தாளர் தேன்மொழி, கம்பராமாயணத்தயும் களக்காடு கோயில் ராமாயண ஓவியங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.
ஜேஎன்யுவின், புலமுதன்மையர் மசார் ஆசிப், துறைத்தலைவர் ஓம் பிரகாஷ் சிங், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அறவேந்தன், சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்தித்துறை பேராசிரியர் பூனம் குமாரி நன்றி கூறினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.