செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்புக்கு காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்பு

Makkal Kural Official

புதுடெல்லி, அக். 21–

டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று காலை 7.47 மணிக்கு குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டு வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய புலன் விசாரணை அமைப்பு, தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோரும் இதை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று டெலிகிராமில் அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அந்த டெலிகிராம் சேனலில் பதிவிடப்பட்டது டெல்லி குண்டு வெடிப்போடு தொடர்புபடுத்தப்பட்டு உள்ளது.

அந்த பதிவில், டெல்லி குண்டு வெடிப்பு வீடியோ இடம் பெற்றுள்ளது. மேலும் கீழே காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாட்டர் மார்க் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய கோழை ஏஜன்சியும் அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்களை அமைதிப்படுத்த, நமது குரலை நசுக்க கேடுகெட்ட ரவுடிகளை பணம் கொடுத்து ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கின்றனர்.

அப்படி நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம். நாம் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோம் என்றும், நம்மால் என்ன செய்ய முடியும் என்றும், அவர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது. நம்மால் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும். #காலிஸ்தான் ஜிந்தாபாத் #ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு குறித்து என்ஐஏ விசாரணையில் இறங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *