செய்திகள்

டெல்லி கட்டிட விபத்து: உயிருடன் 5 பேர் மீட்பு

Makkal Kural Official

டெல்லி, ஜன. 30–

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் கடந்த 27 ந்தேதி 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். கட்டட இடிபாடுகளில் இருந்து 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிருடுன் மீட்கப்பட்ட ராஜேஷுக்கு சிறு கீறல்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், அவரது மனைவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

4 பேர் உயிருடன் மீட்பு

இச்சம்பவம் குறித்து ராஜேஷ் (வயது 30) கூறுகையில், “நான் எனது மனைவி கங்கோத்ரி (வயது 26), மகன்கள் பிரின்ஸ் (வயது 6) மற்றும் ரித்திக் (வயது 3) ஆகியோருடன் கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்தோம். சம்பவத்தன்று, எனது சமையலறையில் எல்பிஜி சிலிண்டர் தீர்ந்துவிட்டதால் மாலை 6.30 மணியளவில் எரிவாயுவை நிரப்பிவிட்டு சமையல் அறைக்கு வந்தேன்.

அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. கேஸ் சிலிண்டர் மீது கூரை ஸ்லாப் விழுந்ததில் கூரையை சிலிண்டர் தாங்கியது. அதில் விழுந்த இரண்டடி இடைவெளியில் நாங்கள் இருந்தோம். மனைவிக்கு காலில் அடிப்பட்ட நிலையில் அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இதனால் குழந்தைகளை நான் பார்த்துக்கொண்டேன்.

குழந்தைகள் பசியில் அழுதுக்கொண்டே இருந்தனர். ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்தபோது மூன்று தக்காளி மற்றும் சில வெல்லத்துண்டுகள் கிடைத்தன. குழந்தைகளுக்கு தண்ணீர் தாகத்திற்காக தக்காளி சாறையும், பசிக்கும்போது வெல்லத்துண்டையும் கொடுத்தேன். ​​நான் மெல்லிய மின்சாரக் குழாயை ஒலித்து சிக்னல் அனுப்பினேன். இதனை அறிந்த மீட்புக் குழுவினர் எங்களை மீட்டனர்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *