புதுடெல்லி, ஜூன் 5–
உலக சுற்றுச்சூால் தினத்தையொட்டி டெல்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி இன்று ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார்.
சமீபத்தில் கட்ச் நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, 1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு அவரை சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றினார்.
பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினமான இன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதற்கிடையே சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் 200 எலெக்ட்ரிக் பஸ் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:–
உலக சுற்றுச்சூழல் தினத்தில் நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை மேலும் ஆழப்படுத்துவோம். சுற்றுச்சூழலைப் பசுமையாக்கவும் சிறப்பாகவும் மாற்றப் பாடுபடும் அனைவரையும் நாம் பாராட்டுகிறேன்.உலகளாவிய காலநிலையைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் சுயநலத்திற்கு மேலாக உயர வேண்டும். பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் என்றும், இந்தியா கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.வளங்களைக் கவனத்துடன் பயன்படுத்துவதையும் நிலையான வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்வதையும் ஆதரிக்கும் மிஷன் லைப் உலகம் முழுவதும் ஒரு பொது இயக்கமாக மாறி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பிளஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இந்த மரக்கன்றுகள் நாட்டில் உள்ள பெண்களின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறினார்.