செய்திகள்

டெல்லியில் 6–ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்: கார்கே அழைப்பு

புதுடெல்லி, டிச. 3–

டெல்லியில் 6ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா, தொடர்ந்து 3வது முறையாக வென்று ஆட்சி அமைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், ஆம்ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டங்களில் இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்குவது, அமைப்பாளரை தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பது போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என சில கட்சிகளும், தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என சில கட்சிகளும் வலியுறுத்தின. இதுபற்றியும், கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

அதன் பிறகு 5 மாநில தேர்தல் நடைபெற்றதால், இந்தியா கூட்டணி கட்சிகளின் நகர்வுகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தேர்தலுக்கு பிறகு முடிவுகள் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் என கார்கே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளையடுத்து இந்தியா கூட்டணியின் 4வது கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வரும் 6–ந்தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் டெல்லி செல்வதற்கான பயண திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரசார வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மோடி செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பதால், அவருக்கு இணையான ஒருவரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டியுள்ளது.

அவசரநிலை பிரகடனத்திற்கு பின், 1977 பொதுத் தேர்தலில்தான் முதல்முறையாக இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது.

இந்திராவின் ‘எமர்ஜென்சி’ அறிப்பால் பாதிக்கப்பட்ட ஜனசங்கம், சோசலிஷக் கட்சி உள்ளிட்டவை இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. 300க்கும் அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளில், காங்கிரசை எதிர்த்து பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதற்கு வித்திட்டவர் ஜெயபிரகாஷ் நாராயணன். அதன் பலனாக ஜனதா கட்சி 298 இடங்களில் வென்றது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த பார்முலாவை பின்பற்றி பாரதீய ஜனதாவுக்கு எதிராக குறைந்தது 300 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்த இந்திய கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும் என தெரிகிறது.

கேரளா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், தொகுதி பங்கீடு செய்வது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், பொது வேட்பாளர் என்பது சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனாலும் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில், கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக உள்ளதால் அதுவும் சாத்தியமாகும். 300 தொகுதிகளில் முடியாவிட்டாலும், எத்தனை தொகுதிகளில் முடியுமோ, அங்கெல்லாம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பொது வேட்பாளர்களை நிறுத்த முயற்சி மேற்கொள்வது முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *