டெல்லி, ஜூன் 28–
டெல்லியில் இன்று காலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர்.
கிழக்கு டெல்லி முதல் தெற்கு டெல்லி வரை தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. விவேகானந்தர் முகாம், கோவிந்த்புரி மற்றும் ஓக்லா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரி வந்தவுடன் ஒரு குடம் தண்ணீருக்காக ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் நிலையும் காணப்படுகிறது.
டெல்லி மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், அரியானாவிலிருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் பெற்றுத்தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை, தடுக்கக் கூடாது என அரியாணா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
4 மணிநேர கனமழை
இந்த நிலையில் இன்று காலையிலிருந்து டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 4 மணி நேரமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வாட்டி வதைத்த வெய்யில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்த நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்கிற போதிலும் அடுத்த வீடுகள் மற்றும் குடியிறுப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இக்கட்டான சூழலில் தாங்கள் மாட்டிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இன்று பெய்த தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.