புதுடெல்லி, ஜூலை 26–
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக டெல்லியின் சாந்தி பாதை, நவுரோஜி நகர், பிகாஜி காமா பிளேஸ், மோதி பாக் ரிங் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு, தெற்கு மற்றும் மத்திய டெல்லி பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இரவிலிருந்து காலைவரை விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் இன்று காலை அலுவலகத்துக்கு செல்வபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
பிரதான தேசிய நெடுஞ்சாலைகளில் கூட, மழைநீர் வடியாமல் முற்றிலும் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீண்ட தூரத்திற்கு சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அவை ஒவ்வொன்றாக ஊர்ந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
மழை நீரோடு பாதாள சாக்கடைகளின் கழிவுநீரும் கலந்து வெளியேறி வருவதால், ஜக்கிரா அண்டர்பாஸ், ஆசாத்பூர் சுரங்கப்பாதை, மின்டோ பாலம், அசோக் விஹார் மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கணிசமான அளவு மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக டெல்லி இக்னோ மற்றும் சப்தர்ஜங்கில் இன்று காலை 4 செ.மீ. மழையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது. தெற்கு டெல்லி பகுதிகளிலும் அதிக மழை பெய்துள்ளது.
டெல்லியில் இன்னும் 2 நாட்கள் மழை தொடரும் என்றும், அன்று வரை மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
டெல்லி–என்சிஆர் பகுதியில் பலத்த காற்றுடன் தீவிரமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக டெல்லியில் இதுவரை 13 நீர்நிலைகள் சரிந்து விழுந்துள்ளன. 8 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதோடு, வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.