போஸ்டர் செய்தி

டெல்லியில் மோடியை சந்தித்தார் எடப்பாடி

Spread the love

புதுடெல்லி, ஜூன் 15

டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகள், திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 2வது முறையாக வெற்றி பெற்று தனி பெருமான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கவர்னர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர்.

டெல்லி சென்ற முதல்வரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் வரவேற்றனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.

மோடியை சந்தித்தார்

அதன்படி டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த மனுவை அளித்தார். அதேபோல் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை தொடர்பான கோரிக்கை மனுவையும் வழங்கினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது தமிழகம் சந்தித்து வரும் வறட்சி நிலைமை, காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, அமீத்ஷா உள்ளிட்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி 2வது முறையாக பதவி ஏற்றப்போது, அந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தற்போது மீண்டும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகலில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *