புதுடெல்லி, டிச.12
டெல்லியில் கோடைகாலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
டெல்லியில் இன்று குளிர்காலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. அயநகர் மற்றும் புசா உள்ளிட்ட இடங்களில் முறையே 3.8 மற்றும் 3.2 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறுகையில், “வெப்பநிலை 4 டிகிரிக்கும் கீழே குறையும் போது குளிர் அலைகள் உருவாகின்றன. டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியசாக இருந்தது.
கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசுக்கு கீழ் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முந்தையகால தரவுகளின்படி, டிசம்பர் மாத காலகட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 1987ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி 4.1 டிகிரி செல்சியஸ் பதிவானதே இன்று வரை மிகக்குறைந்தபட்சமாக நீடிக்கிறது.
24 மணி நேர சராசரி காற்று தரக்குறியீடு நேற்று 199 ஆக இருந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு காற்று தரக்குறியீடு 262 ஆக உயர்ந்து மோசமான நிலையை எட்டியுள்ளது.