செய்திகள்

டெல்லியில் மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 11:

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.18,500 கோடியை உடனே ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. பா.ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு பட்ஜெட் தேதியை மாற்றி அமைத்ததன்படி அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 9-வது பட்ஜெட் ஆகும். பொதுவாக ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் முன்பாக பல கட்டங்களில் முன்தயாரிப்பு கூட்டங்கள் துறைவாரியாக நடைபெறும். அதன்படி இந்த பட்ஜெட்டுக்கான முன்தயாரிப்பு கூட்டங்கள் ஏற்கனவே பலமுறை நடந்துள்ளன.அமைச்சர்

தங்கம் தென்னரசு

இந்த நிலையில் பட்ஜெட் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் மீண்டும் ஒரு, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அசோக் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொருளாதார சவால்கள், முக்கியமான நிதி முன்னுரிமை வழங்கல்கள் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) உதயச்சந்திரன், இணைச்செயலாளர் பிரத்திக் தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை மத்திய அரசு 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்தது. மத்திய அரசு தனது பங்குத் தொகையான ரூ.9,500 கோடியை விடுவிப்பதை எதிர்நோக்கி, தமிழ்நாடு அரசு இத்தொகையை விடுவித்துள்ளது. இத்தொகை, மாநில அரசின் நிலுவைக் கடன்களின் ஒரு பகுதியாக இடம் பெற்று வருகிறது. எனவே மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து ஒப்புதல் அளித்திட வேண்டும்.

வரி விகிதங்களை அமெரிக்கா உயர்த்தி வருவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 31 சதவீதம் அமெரிக்க நாட்டுடன் நடைபெறுவதால், இந்த உயர் வரி விகிதங்கள், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டை மிகவும் கடுமையாக பாதிக்கிறது. ஜவுளித் துறை இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம், 75 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதால் இதை தேசிய சவாலாகவே கருத வேண்டும். இல்லாவிட்டால் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்திக்க நேரிடும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் சீரமைப்பு, மாநில அரசுகளின் வருவாயை மேலும் பாதித்து, நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதை தவிர்க்க இழப்பீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீதான மத்திய அரசின் ஆயத்தீர்வைகள் உயர்த்தப்படும்போது, கூடுதல் வருவாய் மத்திய அரசிற்கே முழுமையாகச் சென்றடைகிறது. இதில் மாநிலங்கள் தங்களுக்கு உரிய பங்கைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரிவிகிதங்களுடன் இணைக்க வேண்டும். வளர்ந்த பாரதம் – வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயலிழக்கிறது. இத்தகைய புதிய பங்கீட்டு முறை காரணமாக மாநிலங்களின் மீதான நிதிச்சுமை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, இந்தத் திட்டத்தின் செலவுப் பங்கீட்டு விகிதத்தையும், மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கல்வி நிதி

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.9,025.68 கோடி உள்பட, ரூ.18,123.05 கோடி மதிப்பிலான பணிகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் 2024-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி ஏதும் விடுவிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள மத்திய அரசின் பங்கான ரூ.3,112 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலவி வரும் கடுமையான புளோரோசிஸ் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகத் திட்டத்தின் 3-ம் கட்டப்பணிகளுக்கான ரூ.8,428 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்காக, பல்வேறு தரப்புகளிலிருந்து நிதி ஆதாரங்களை எதிர்பார்த்துள்ள நிலையில், மத்திய அரசானது தனது பங்கான ரூ.2,283 கோடியை வழங்க மறுத்துவிட்டது. இதனால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவே உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்த தனது பங்குத்தொகையான ரூ.3,548 கோடியை இதுவரை விடுவிக்கவில்லை. இது 44 லட்சம் மாணவர்களின் கல்வியையும், 2.4 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது. எந்தவொரு நிபந்தனையையும் விதிக்காமல் இந்நிதியை விடுவிக்க வேண்டும்.

ரெயில் திட்டங்கள்

பிரதமர் வீட்டுவசதித் (ஊரகம் மற்றும் நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், மத்திய அரசு 75 சதவீதம் பங்களிப்பை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு, திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி-ஓசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடம்; மதுரை-தூத்துக்குடி வழி அருப்புக்கோட்டை இருப்புப்பாதை வழித்தடம்; மீஞ்சூர்-திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் சிங்கப்பெருமாள்கோயில்-மதுராந்தகம் இருப்புப்பாதை வழித்தடம்; சேலம்-ஓசூர்-பெங்களூரு மற்றும் கோவை -எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை, சேலம், கோவை ஆகிய இடங்களை இணைக்கும் மிதவேக இருப்புப்பாதை வழித்தடம் ஆகிய ரெயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

தாம்பரம்-செங்கல்பட்டுக்கு இடையேயான உயர்மட்டச் சாலை மற்றும் செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரையிலான சாலை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சென்னை – கன்னியாகுமரி வழித்தடத் திட்ட மேம்பாட்டுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்களிப்பான ரூ.18,443 கோடியை மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கோரியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *