செய்திகள்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி, செப்.9–

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லியில் நடைபெறும் ஜி–20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தனது மகளுடன் உடன் இருந்தார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடன நிகழ்ச்சியை அதிபர் ஜோபைடன் பார்த்து ரசித்தார்.

இதையடுத்து அதிபர் ஜோபைடன், பிரதமர் நரேந்திர மோடியை லோக் கல்யான் மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அப்போது அவரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

இதனையடுத்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவில் ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்கும் ஒப்பந்தத்தின் முன்னேற்றம், எம்.க்யூ–9 பி ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்குதல், சிவில் அணுசக்தி பொறுப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம், 5ஜி மற்றும் 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கூட்டாக செயல்படுவது, சர்வதேச விவகாரங்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இன்றைய சந்திப்பில் இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா–அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி மிஸ்டர் பிரைம் மினிஸ்டர். இன்று மட்டுமல்ல, ஜி–20 முழுவதும், வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாத வகையில், அமெரிக்கா–இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது என்பதை உறுதிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார். 2020 பிப்ரவரியில் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்திருந்தார். பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தார்.

இதேபோல மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *