புதுடெல்லி, பிப். 7–
டெல்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கன் பள்ளிக்கும், செயின் ஸ்டீபன் கல்லூரிக்கும் இ–மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பின்னர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் ஷிவ் நாடார் பள்ளியில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.