மாலையில் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர்
புதுடெல்லி, மே 24–
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது.
நிதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரிபுரா முதலமைச்சர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார்.
புறக்கணித்த முதல்வர்கள்
ஏற்கனவே அறிவித்தப்படி நிதி ஆயோக் கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர். மேலும் கேரளம், புதுச்சேரி மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் அறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் இந்த நிதி ஆயோக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் மோடியிடம், மு.க.ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார். இதேபோல், பிற மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாசல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடன் சந்திப்பு
இந்நிலையில், பிரதமர் மோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.10 மணியளவில் சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கின்றது. இதில் பள்ளி கல்வி துறை, மெட்ரோ ரெயில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த துறை சார்ந்த, தமிழகத்திற்கான நிதியை தருவது பற்றி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் பிரதமருடனான இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு நிதி விடுவிப்பது பற்றி மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.