2 பேரை கைது செய்த போலீசார்
டெல்லி, ஜூன் 27–
டெல்லியில் துப்பாக்கி முனையில் காரை வழிமறைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி சாந்தினிசவுக் பகுதியில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வரும் பட்டேல் சஜன் குமார் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றார். இவர் பிரஹதி மைதான் சுரங்கப்பாதையில் காரில் சென்றுகொண்டிருந்த போது அந்த காரை பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த நான்கு பேர் திடீரென அந்த காரை வழிமறித்தனர்.
பின்னர் அந்த காரில் உள்ளவர்களை வெளியே வர சொன்ன கொள்ளையர்கள் 4 பேர், தங்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, காரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
2 பேர் கைது
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணையை துரிதப்படுத்திய டெல்லி போலீசார் முதற்கட்டமாக 2 பேரை கைது செய்துள்ளனர். எஞ்சிய 2 பேரும் அடையாளம் காணப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் டெல்லியின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.