புதுடெல்லி, ஜன. 6–
டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வழக்கில் கார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி கஞ்சவாலா நகர் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் அமர்ந்து சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார். அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று அவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. அந்த கார், குறிப்பிட்ட சாலையில் சுற்றி, சுற்றி 4-5 முறை வந்துள்ளது. மொத்தம் 12 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது.
இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லி மட்டும் இன்றி நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேட்டியளித்த காவல்துறை சிறப்பு அதிகாரி, நாங்கள் இந்த வழக்கில் தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் மிட்டல் என்ற ஐவரை கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரை இயக்கியது தீபக் அல்ல அமித் என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது. மேலும் இருவரை தேடி வருகிறோம் என்று கூறினார்.
இந்நிலையில் காரின் உரிமையாளர் அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். காரில் இருந்த ஐந்து பேரும் அசுதோஷிடம் இருந்து தான் காரை இரவலாக வாங்கியுள்ளனர் என்று தெரியவந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய அன்கூஷ் கன்னா என்ற மற்றொருவரையும் டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.