செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்; 17 விமானங்கள் ரத்து

டெல்லி, ஜன. 16–

டெல்லியில், கடும் பனிமூட்டம் காரணமாக 30 விமானங்கள் தாமதாகியுள்ளதுடன், 17 விமானங்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நேற்றும், நேற்று முன் தினமும் போகி பண்டிகையால் உருவாக புகைமூட்டத்துடன் பனிமூட்டமும் சேர்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டு, விமானங்கள் தாமதமானதைப் போலவே டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்துடன் நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர். பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 30 விமானங்கள் தாமதமாகின. 17 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலெர்ட்

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லி, அரியாணா, வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்குவங்கத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்குப் பகுதிகளிலும் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது.

குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டமும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடரும். இதனால் டெல்லிக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. காலை நேரத்தில் அடர் பனிமூட்டம் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் நிலவியதால் நேற்றும் (திங்கள்கிழமை) டெல்லியில் இருந்து மட்டும் 5 விமானங்கள் மாற்றிவிடப்பட்டன. 100 விமானங்கள் தாமதமாகச் சென்றன. புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 30 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டன. ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *