புதுடெல்லி, ஜன. 8–
டெல்லியில் நிலம் கடும் பனிமூட்டம் காரணமாக 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அங்கு 2.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே பதிவானது. அதாவது 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே காணப்பட்டது.
இதனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால் காலையில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
மேலும் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் கடும் பனி சூழ்ந்து காணப்படுகிறது. காலை நேரத்தில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.
இதனால் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே செல்கின்றன.
டெல்லி விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் விமானங்கள் வந்து இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வந்து சேரும் விமானங்கள் காலதாமதமாகவே வருகின்றன.
இதனால் 20 விமானங்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவை காலதாமதமாக வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.